இந்திய ஆரிய மொழிக் குடும்பத்தில் சிறந்த ஒரு மொழியாக அறிஞர்களால் போற்றப்படும் சிங்கள மொழி, இலங்கை மக்கள் பெரும்பான்மையினரின் எழுத்து மற்றும் பயன்பாட்டு மொழியாக இன்று வழக்கிலுள்ளது. 2500 வருட நீண்ட காலப்பகுதியினுள் பல்வேறு மாற்றங்கள் மற்றும் மொழித் தாக்கங்களின் ஊடாக உருப்பெற்ற சிங்கள மொழியின் உயரிய படைப்பாக விளங்குவது சிங்கள அகராதியாகும்.
ஆங்கிலேய ஆட்சிக்காலப் பகுதியில் அரச அனுசரணையுடன் ஆரம்பித்த சிங்கள அகராதி முயற்சிகள், இதுவரையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. றோயல் ஆசிய சங்கத்தின் இலங்கைக் கிளையின் கீழ் இடம்பெற்ற இச்செயற்பாடு காலப்போக்கில் இலங்கைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1972 ஆம் ஆண்டு கல்வி மற்றும் கலாசார அமைச்சுக்கு இத்துறை பொறுப்பளிக்கப்பட்டதுடன், இலங்கைக் கலாசார சபையினால் நிர்வகிக்கப்பட்டது. பின்னர் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்குரிய ஒரு நிறுவனமாக, சிங்கள அகராதி அலுவலகம் எனும் பெயரில் பரந்த ஓர் ஆராய்ச்சிச் செயற்பாட்டை இது மேற்கொண்டு வருகின்றது. நவீன அகராதி முயற்சிகளுக்கு (Lexicography) ஏற்ப உலகின் எந்தவொரு நவீன அகராதிக்கும் சளைக்காத உன்னத தரத்துடன் இம் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அகர வரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்களின் மூலங்களைத் தேடிச்சென்று, அவற்றின் இலக்கண ரீதியான பொருள் சுட்டிக்காட்டப்பட்டு, அவ்வச் சொற்களின் பொருளை மிகச் சரியான முறையில் வெளிப்படுத்துவதற்கு மேற்கொண்ட பிரயத்தனமாக சிங்கள அகராதியைக் கொள்ளலாம். ஒரே பொருளைத் தரும் சொற்களை மட்டும் கொண்டு இயற்றப்பட்டு வெளிவரும் பல அகராதிகளிடையே இது தனித்தமையுடன் விளங்குவது மேற்கூறப்பட்ட காரணத்தினாலேயாகும். தற்போது பலரும் தனிப்பட்ட ரீதியாக தம் விருப்பத்திற்கிணங்க அகராதி முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடும் தனிப்பட்டவர்களும் குழுக்களும் மொழி தொடர்பாகத் தாம் கொண்டுள்ள எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், எமது சிங்கள அகராதி நூல் அவ்வாறு தனிப்பட்ட ஒருவரது அறிவுத் துறையுடன் மட்டும் எல்லைப்படுத்தப்பட்டதல்ல. பல்வேறு துறைகளில் அனுபவமும் அறிவும் கொண்ட கல்விமான்களின் ஆலோசனைகளுடன் இச்சிங்கள அகராதி நூல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பம் தொடக்கம் தற்போது வரையில் இவ்வகராதி முயற்சியில் ஈடுபடும் பிரதான எழுத்தாளரை முதற்கொண்ட எழுத்தாளர் குழாமானது, பட்டதாரிகளையும் அகராதி தொடர்பாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட கல்வியியலாளர்களையும் கொண்டுள்ளது.
இலங்கையில் பின்பற்றப்படும் மொழிக்கொள்கைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்களும் தற்போது அகராதி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சிங்கள – சிங்கள மற்றும் சிங்கள – ஆங்கில அகராதிகளைத் தவிர சிங்கள – தமிழ் – ஆங்கில எனும் மும்மொழி அகராதியும் தற்போது இயற்றப்பட்டுக்கொண்ருக்கின்றது.
சிங்கள மொழிக்கு உரித்தாகும் எந்தவொரு சொல்லினதும் பொருள் தொடர்பான உரிமை சிங்கள அகராதிக்கே உரித்தாகின்றது. சொற்களின் பொருள் தொடர்பாக ஏற்படும் சிக்கல்கள், சிங்கள அகராதியின் மாற்றங்களுக்கு ஏற்பவே தீர்க்கப்படுகின்றன. தற்போது சிங்கள - சிங்கள அகராதியில் திருத்தப்பட்ட மற்றும் மீள் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்ட சொற்கள் மற்றும் பொருள் மாற்றங்கள் வாயிலாக மொழியை புதுப்பித்தல் தொடர்பான செயற்பாடு, இந்தத் திருத்தப்பட்ட பாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. உலகமயமாதலுக்கு ஏற்ப நாளுக்கு நாள் உலகில் தோற்றம் காணும் நவீன துறைகளுக்கு ஏற்ப சிங்கள மொழியை வளப்படுத்திய வண்ணம் அதன் உயிரோட்டத்தைப் பாதுகாப்பதற்கான பெரும் பங்களிப்பு சிங்கள அகராதி முயற்சியின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றது.