அகராதி முயற்சிகள் சிங்கள மொழிக்கு புதியனவன்று. பாளி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு எழுதப்பட்ட நிகண்டு பாணியில் இயற்றப்பட்ட அகராதிகள் பல சிங்கள மொழியில் காணப்படுகின்றன. அவ்வகையில் அத்தரகம ராஜகுரு பண்டார, வேரகம புஞ்சிபண்டார, போருக்கமுவே ரேவத்த ஹிமி போன்ற கல்விமான்களால் இயற்றப்பட்ட அகராதி நூல்கள் பல இலங்கை அகராதி நூல் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. எனினும் அவை சிங்கள மொழி தொடர்பாக போதுமானவையாகவும் பூரணத்துவம் மிக்கவையாகவும் இல்லை. சிங்கள மொழி தொடர்பாக கல்வியியல் ரீதியானதும் நவீனமயமானதுமான அகராதி ஒன்றினது அவசியம் 16 ஆம் நூற்றாண்டு இடம்பெற்ற ஐரோப்பியரின் வருகையுடன் உணரப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப அரைப் பகுதியில் ஜோன் கலவே பென்ஜமின் கிளப், சார்ல்ஸ் காட்டர் போன்ற பிரித்தானிய நாட்டவர், சிங்கள – ஆங்கில அகராதி நூல்கள் பலவற்றை இயற்றுதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அத்தேவைகளின் விளைவானவை எனலாம்.

கி.பி. 1845 இல் றோயல் ஆசிய சங்கத்தின் இலங்கைக் கிளை நிறுவப்பட்டது. இது இந்நாட்டில் வாழ்ந்த வெளிநாட்டுக் கல்விமான்களிடையே சிங்களம் மற்றும் சமஸ்கிருத கற்கை தொடர்பான வளர்ச்சிக்கு வழிகோலியது. இத்தருணத்தில் சுதேச மற்றும் வெளிநாட்டு கற்றறிந்தோர்க்கு சிங்கள மொழி தொடர்பான ஒரு முழுமை பெற்ற அகராதி இன்மையின் குறைபாடு தோன்றியது. இதன் காரணமாக இலங்கையில் அப்போதைய கல்விப் பணிப்பாளராக பதவி வகித்த சார்ல்ஸ் புரூஸ் (Charls Bruse) மற்றும் லண்டன் இந்திய நூலகத்தின் தலைவராகவிருந்த ரயின்ஹோல்ட் ரொஸ்ட் (Reinhold Rost) மூலம் அது தொடர்பான ஒரு சபை நியமிக்கப்பட்டதாயினும், அகராதி எழுத்து முயற்சிகள் இடம்பெறவில்லை. 1923 ஆம் ஆண்டு ஏ. மெண்டிஸ் குணசேகர அவர்கள் மூலம் கல்விப் பணிப்பாளருக்கு இது தொடர்பாக மீண்டும் நினைவுபடுத்தப்பட்டது. அவ்வகையில் கொழும்பு யுனிவர்சிட்டி கொலேஜ் இன் தலைவராகவிருந்த ஆர். மார்ஸ் (R. Mars) என்பவரின் தலைமையின் கீழ் ஒரு சபை நியமிக்கப்பட்டது. அந்தச் சபை அறிக்கையின் அடிப்படையில் ஒரு சிங்கள அகராதி நூல் இயற்றப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில் 1927 ஆம் ஆண்டு கௌரவ D.B. ஜயதிலக்க என்பவரின் தலைமையில் இது ஆரம்பிக்கப்பட்டது. பேராசிரியர் ஹேல்மன் ஸ்மித் டி, W.F குணவர்த்தன மற்றும் ஏ. மெண்டிஸ் குணசேகர ஆகியோரும் எழுத்தாளர் குழாத்தின் அங்கத்தினராக விளங்கினர். சிங்கள மொழி தொடர்பாக சிறந்த அறிவும் ஒலியியல் அறிவும் பெற்றவரான ஜேர்மன் நாட்டு பேராசிரியர் வில்ஹேல்ம் கய்கர் (Wilhelm Geiger) இவ்வகராதி எழுத்துப் பணிகளின் ஆலோசகராகவும் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். எல். ஜே. பி. டர்னர் (L.J.B. Tuner) அவர்களின் தலைமையில் நிர்வாக சபை ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது.
சிங்கள- ஆங்கிலம் மற்றும் சிங்களம் - சிங்களம் எனும் இரு அகராதி நூல்கள் ஆக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, 1935 ஆம் ஆண்டளவில் சிங்கள – ஆங்கில அகராதி நூலின் முதற் தொகுதியின் முதற் பாகமும் 1937 ஆம் ஆண்டளவில் சிங்கள – சிங்கள அகராதியின் முதற் பாகமும் வெளியிடப்பட்டன.

1942 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து றோயல் ஆசிய சங்கத்தினால் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்குப் பொறுப்பளிக்கப்பட்ட அகராதி எழுத்து முயற்சிச் செயற்பாடுகள், 1972 ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

கௌரவ டி.பி. ஜயதிலக்க, பேராசிரியர் எம்.டி. ரத்னசூரிய, ஜூலியஸ் த லனரோல், கலாநிதி பி.பி.எப் விஜேரத்ன, பேராசிரியர் டி. ஈ. ஹேட்டியாராச்சி, பேராசிரியார் டி.ஜே. விஜேரத்ன (தலைமை எழுத்தாளர்), கலாநிதி P.B. சன்னஸ்கல, பேராசிரியர் G. பலகல்லே, பேராசிரியர் வினீ விதாரண, பேராசிரியர் ஆனந்த அபேசிரிவர்த்தன ஆகியோர் அன்று தொடக்கம் இன்று வரையில் பிரதான எழுத்தாளர் குழாத்தில் அங்கம் வகிக்கின்றனர். தற்போது கலாநிதி வணக்கத்திற்குரிய அக்குரட்டியே நந்த தலைமைச் சுவாமிகள், தலைமை எழுத்தாளர் பதவியை வகித்த வண்ணம் இத்தேசியப் பங்களப்பினை மேற்கொண்டு வருகின்றார். 1992 ஆம் ஆண்டளவில் சிங்கள – சிங்கள அகராதி நூல் முயற்சிகள் நிறைவு பெற்றதுடன், அதன் திருத்தப்பட்ட பதிப்புக்களின் ஐந்து பகுதிகள் வெளியிடப்பட்டன. தற்போது சிங்கள – ஆங்கில அகராதி நூலின் அ – ‘கிலன்பச பூஜாவ’ வரையிலான சொற்கள் உள்ளடக்கப்பட்டு 27 பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், சிங்கள – சிங்கள அகராதி நூல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சிங்கள - ஆங்கில – தமிழ் எனும் மும்மொழியிலான ஓர் அகராதி முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.